மாற்றான் குண்டுகள் - உன் மர்பைத் துளைத்தனவோ!
மாமனிதன் உன்னை மண்ணில் சாய்த்தனவோ!
சிதறிய தேங்காய் போல் சில்லாகிப் போனாயோ!
அன்றி நரிகள் கையில் சிக்காது நஞ்சை நீ மென்றாயோ!
சூரியக் கதிர் சமர்தனிலே சூரியன் நீ அணைந்தாயே!
ஈன்றெடுத்த மண்தனிலே இரத்த விதை விதைத்தாயே!
மாவீரர் சமாதியிலே மறவனாய் மலர்ந்தாயே வெளிநாட்டுத் தமிழருக்கும் வெகுட்சி வரச் செய்தாயே!
வெங்கதிர்ச் செல்வன் படைதனிலே வேங்கையாய் பாய்ந்தவனே வேட்டை ஆட வந்தவரை வெட்டிப் புதைத்தவனே ஊர் உறவு வாழ்வதற்காய்
உறங்காமல் உழைத்தவனே!
உறங்காமல் உழைத்ததினால் - இன்று உறக்கத்தில் போனாயோ!
தானைத் தலைவன் ஆணைப்படி அணி வகுத்த புலிகளைப் பார் படையெடுத்த பகைவர் கொடி பாதியிலே எரிந்ததைப் பார் முப்படை மூடரெல்லாம் முல்லையிலே முறிந்ததைப் பார் கூவி வந்த கூட்ட மின்று குரலிழந்து போனதைப் பார் மண்ணோடு நீ கலந்து மலராகிச் சிரிக்கின்றாய் விண்ணோக்கி நான் பார்த்தால் விண் மீனாய் ஒளிர்கின்றாய் வாள் ஏந்தும் வீரருக்கு வேராக நிற்கின்றாய் விடிவு தேடும் மக்களுக்கு விடிவெள்ளி நீ தானே.
1 comment:
nanraaga irukkiradhu nanbare.
Post a Comment