தமிழகத்தில் வள்ளுவர், ஔவை, இளங்கோ, கம்பன், பாரதி, பாரதிதாசன் துவங்கி கண்ணதாசன் வரை சிலைகள் அமைக்கபட்டுள்ளன. பிறந்தநாள், நினைவுநாளில் மாலைகள் போடப்படுவதோடு அவர்களுக்கான இடம் முடிந்து போகிறது. இன்னொரு பக்கம் பல தமிழக கோவில்களில் தமிழ்கவிஞர்களுக்கு தனியான சன்னதிகள் காணப்படுகின்றன. கவிஞர்கள் கடவுளுக்கு சமமாக வணங்கப்படுகிறார்கள். இந்த முரண் வியப்பானது.
வெவ்வேறு காரணங்கள் பிரார்த்தனைக்காக கோவிலுக்கு பலரும் சென்று வருவது போல பிரசித்தி பெற்ற தமிழ்கவிஞர்களை அறிந்து கொள்ளவும் அவர்களின் உருவச்சிலைகளை காண்பதற்காகவும் ஒரு தனிப் பயணம் போய் வரலாம்.
சென்னையில் இரண்டு கவிஞர்களுக்கு கோவில்கள் உள்ளன. ஒன்று மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் திருக்கோவில். திருவள்ளுவர் சமண சமயத்தை சேர்ந்தவர் என்றே கூறப்படுகிறது. ஆனால் குறள் நெறி சமயபேதமின்றி சகலருக்கும் பொருந்தக்கூடியதே.
மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருதக் கல்லூரிக்கு கிழக்கு பக்கமாகவும் முண்டக்கண்ணி அம்மன் கோவிலின் மேற்கு பக்கத்திலுமாக உள்ளது இந்த திருவள்ளுவர் கோவில். சிறிய கோவில் . மிக பழமையானது என்கிறார்கள். உள்ளே திருவள்ளுவர் பிறந்த இடம் என்று கம்பிஅழியிடப்பட்ட ஒரு மேடையிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில் . இங்கே வள்ளுவரின் மனைவி வாசுகியின் சிலையும் காணப்படுகிறது. திருவள்ளுவர் நினைவுநாளான மே - ஜுன் மாதத்தில் உள்ள உத்திரை நட்சத்திரத்தில் இங்கு அன்னதானம் அளிக்கபடுகிறது என்றும் கேள்விபட்டேன்.
வள்ளுவர் யார் என்பது பற்றிய முழுமையான சான்றுகள் இன்றுவரை நமக்கு கிடைக்கவில்லை. இன்று நாம் காணும் வள்ளுவரின் உருச்சித்திரம் கற்பனையாக வரையப்பட்டதே. திருக்குறளுக்கு என்று மட்டுமே தனி நூலகங்கள் இருக்கின்றன. குறள் நெறியில் வாழ்வை முன்னெடுத்து செல்லும் தவச்சாலைகள் கூட உள்ளன.
நான் அறிந்தவரை திருவள்ளுவருக்கு கோவில் இருப்பது சென்னையில் மட்டுமே.
இதுபோலவே பெரிய புராணம் இயற்றிய சேக்கிழாருக்கு சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் தனிக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சேக்கிழார் தான் மூலவர். அவரது திருவுருவச்சிலையும், கோவில் சுவர்களில் சோழ அரசன் அநபாய சோழன் கேட்ட கேள்விக்கு சேக்கிழார் திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டி சொன்ன பதில்கள் காணப்படுகின்றன.
வடசென்னைப்பகுதியில் உள்ள திருவெற்றியூரில் பட்டினத்தார் அடங்கிய இடம் தனியான சன்னதியாக வழிபடப்பட்டு வருகிறது. அதுபோலவே திருவெற்றியூரில் சூபிக்கவிஞர் குணங்குடி மஸ்தான் சாகிபு நினைவு தர்க்காவும் காணப்படுகிறது.
ஆரல்வாய்மொழி அருகில் உள்ள முப்பந்தலில் ஔவையாருக்கு தனிக்கோவில் உள்ளது. இங்கே ஔவையாரின் உருவச்சிலையை வழிபடுவதோடு ஆடிமாசத்தில் ஔவை நோன்பு என்று திரளாக பெண்கள் நோன்பிருக்கிறார்கள்.
திருப்பாவை பாடிய ஆண்டாளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரம்மாண்டமான கோவிலும் அவள் தோழிகளுடன் உலவிய நந்தவனமும் மடவார்வளாகமும் காணப்படுகிறது
பழனி கோவிலின் பிரகாரத்தில் சித்தர்களில் மிக முக்கியமானவரான போகருக்கு வழிபாடு உள்ளது போகர் தான் சீனாவிற்கு சென்று மருத்துவ முறைகளையும் ரகசியமான போர்கலையையும் கற்பித்தார் என்ற நம்பிக்கை இன்றும் இருந்து வருகிறது.
திருவழுந்தூரில் உள்ள பெருமாள் கோவிலில் கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு தனிசன்னதி காணப்படுகிறது. தன் மனைவியோடு கம்பன் திருவுருவச்சிலை இங்கே காணப்படுகிறது. திருவழுந்தூர் கம்பன் பிறந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையை அடுத்த திருவாதவூரில் திருவாசகம் இயற்றிய மாணிக்கவாசகருக்கு வழிபாடும் பூஜைகளும் செய்யப்படுகின்றன .
இது போலவே மதுரை பல்கலைகழகத்திற்கு நேர் எதிரில் உள்ள பெருமாள்மலையில் சீவகசிந்தாமணியை திருத்தக்க தேவர் அரங்கேற்றிய இடம் என்றொரு குகை உள்ளது.இங்கே சமணபடுகைகள் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் சமண துறவிகள் கற்றுக் கொள்ளும் பாடசாலையாக செயல்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகள் அங்கே காணப்படுகின்றன.
குறிப்பாக கற்றுத்தரும் ஆசிரியருக்கு என்று தனியான கல்லால் ஆன படுக்கையும் மாணவர்களும் ஒன்று சேர்ந்தது போல வரிசையான படுக்கைகளும் காணப்படுகின்றன. குகையின் உள்ளேயே ஒரு நீருற்று காணப்படுகிறது. மிக அழகான சமண திருவுருவங்கள் சிற்பங்களாக செதுக்கபட்டிருக்கின்றன.
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு திருவண்ணாமலை கோவிலில் தனியாக ஒரு சன்னதி காணப்படுகிறது. அதுபோலவே நம்மாழ்வாருக்கு அவர் பிறந்த திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரி கோவிலில் சன்னதி உள்ளது.
இதுபோல இன்னும் அறிந்தும் மறந்தும் போன நிறைய கவிஞர்களுக்கு ஆலயபிரகாரத்தில் தனியான வழிபாடுகள், சன்னதிகள் இருக்ககூடும். இதில் எத்தனை கவிஞர்கள் கோவில்களுக்கு செல்பவர்களின் கண்ணில் பட்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை கண்ணில்பட்டிருந்தால் கூட கன்னத்தில் போட்டுக் கொண்டு கடந்து போய்விடுவதை தவிர வேறு எதுவும் நடந்திருக்காது.
வளமையான தமிழ்செவ்வியல் கவிதைகளை மறுவாசிப்பிற்கு உட்படுத்த வேண்டிய மிக முக்கியமான காலமிது. நூற்றுக்கணக்கான தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்கள் எவர் கவனத்திற்கும் உள்ளாகாமல் தூசியடைந்து கிடக்கின்றன. சங்க கவிதைகள் துவங்கி தமிழ் காப்பியங்கள் வரை இன்று புதிய பார்வையோடு விளக்கத்தோடு எடுத்து சொல்லப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Free Baccarat - Fbcasino
The game can be played online, by playing against 메리트카지노 the 바카라사이트 computer, by playing against yourself. No matter if you're a gamer, you should take note 온카지노 of the
Post a Comment