tamil - summa oru news

குட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘!

நாகப்பட்டினம் அருகே சுனாமி பேரழிவிலிருந்து மெல்ல மெல்ல மீண்டும் வரும் வாணகிரி என்ற சிறிய கடற்கரை கிராமத்தில் பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டு விடுபவர்கள் யாரும் இல்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் யாரும் படிப்பை இடையிலேயே விட்டு விடக்கூடாது என்பதில் அந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவியின் தீவிர அக்கறையும் அதற்குக் காரணம் என்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விஷயம். சுனாமி பேரழிவில் 52 பேரை காவு கொடுத்த சீர்காழி தாலுகாவில் உள்ள வாணகிரி என்ற அந்த கிராமம் அந்த கோரச்சுவடுகளிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது என்பதை அந்த ஊரில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களைப் பார்த்தாலேபோதும். சுனாமிக்குப் பிறகு நடந்த தேர்தலில் அந்த ஊருக்கு புதிதாக பெண் பஞ்சாயத்துத் தலைவியைக் கொண்டு வந்திருக்கிறது.

பொதுவாக பஞ்சாயத்துகளில் பெண்கள் தலைவராக வந்தால், அவரது சார்பில் கணவரே மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கிறோம். ஆனால், முதல் முறையாகப் போட்டியிட்டு வாணகிரி பஞ்சாயத்து தலைவியாகி இருக்கிறார் குமாரி (54 வயது). அவரது கணவர் கலியபெருமாள் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர். ஆனால், தனக்குக் கிடைக்காத பேரும் புகழும் தனது மனைவியின் செயல்களால் அவருக்குக் கிடைப்பதை பார்வையாளர் போல ஒதுங்கி நின்று புன்முறுவல் பூக்கிறார். நான்கு பெண் குழந்தைக்குத் தாயான குமாரி, வீட்டுப் பொறுப்புகளை பெண் குழந்தைகளிடம் ஒப்படைத்து விட்டு பொதுக் காரியங்களில் யாரையும் எதிர்பாராமல் தானே முன்முனைப்புடன் செயல்படுகிறார். யாரையும் எதிர்பார்க்காமல் மக்களைச் சந்தித்து பிரச்சினைகளைத் தீர்க்க நினைக்கிறார். மீனவர் குடும்பப் பெண்மணியான அவரது குழந்தைகள் அனைவரும் பிளஸ் டூ படிப்பைத் தாண்டி விட்டனர். ஒரு மகளை எம்.எஸ்சி., எம்.பில். அளவுக்கு படிக்க வைத்திருக்கிறார். தனது குழந்தைகளை படிக்க வைத்தது போல, ஊரில் உள்ளவர்களின் குழந்தைகளும் படிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகிறார்.

கல்வியும் சுகாதாரமும் மட்டுமே அந்த கிராமத்தை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவும் என்பதை உறுதியாக நம்பும் அவர், குறிப்பாக பெண் குழந்தைகள் படிப்பை இடையிலேயே விட்டு விடக்கூடாது என்பதில் கூடுதலாக அக்கறை செலுத்தி வருகிறார். இந்த ஊரில் ஒரு தொடக்கப் பள்ளியும் நடுநிலைப் பள்ளியும் உள்ளது. யாராவது பெண் குழந்தைகள் படிப்பை இடையிலேயே விட்டு விட்டால், அவர்களது பெற்றோர்களுடன் பேசி பிரச்சினையைக் கேட்டறிந்து அந்தக் குழந்தைகளை பள்ளிகளில் கொண்டு சேர்ப்பது அவரது வாடிக்கை. பிரதமரின் சுனாமி நிவாரண நிதியிலிருந்து பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மாதத்திற்கு 300 ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையை பெறுவதற்கு இருந்த சிக்கல்களைப் போக்கி, தொடக்கப் பள்ளியில் 68 பெண் குழந்தைகளும் நடுநிலைப் பள்ளியில் 138 பெண் குழந்தைகளும் பெறுவதற்கு உதவியிருக்கிறார் அவர்.

வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் அங்குள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்களை நடத்தி இருக்கிறார். தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் விரும்பும் மாணவிகளுக்கு தையல், எம்பிராய்டரி, பொம்மைகள் செய்தல் போன்ற கைத்தொழில்களைக் கற்றுத்தரவும் அவர் ஏற்பாடு செய்துள்ளார், அரசு அறிமுகப்படுத்தியுள்ள இங்குள்ள நடுநிலைப் பள்ளியில் ஒரு தொண்டு நிறுவனம் கொடுத்த கம்ப்யூட்டர்கள், அந்த பள்ளி மாணவர்களுக்கு நவீனத் தொழில்நுட்பத்தின் புதிய வாசல்களை அறிமுகம் செய்துள்ளன. ஊரில் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக கல்விக்குழுவை சீராக இயங்கச் செய்துள்ளார் குமாரி, இந்தக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் மட்டுமில்லாமல், மீனவர் பஞ்சாயத்து உறுப்பினர்களையும் இக்குழுவில் அமர்த்தியுள்ளார். இதனால் ஈகோ பிரச்சினைகள் இல்லாமல் பணிகள் நடக்கின்றன. இந்த கிராமத்தில் உள்ள வசதி படைத்தவர்களிடம் புரவலர் திட்டத்தின் கீழ் பள்ளி வளர்ச்சி நிதிக்காக இதுவரை 60 ஆயிரம் ரூபாய் வரை திரட்டியுள்ளார் குமாரி. விளையாட்டு முறையில் மகிழ்ச்சிகரமான கற்பித்தல் முறையை சிறப்பாகச் செயல்படுத்தியதால், மாவட்ட அளவில் இந்த ஊரில் உள்ள பள்ளிக்கு சிறப்புக் கிடைத்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் வருகிற வருமானத்தின் பெரும் பகுதியை கந்துவட்டிக்கே கொடுத்து விட்டு சோகத்தில் ஆழ்ந்து கிடந்தன பல மீனவக் குடும்பங்கள். தொடக்கத்தில் ஊர் பஞ்சாயத்துக்கார்களின் எதிர்ப்பையும் மீறி அந்த ஊரில் அவர் சுய உதவிக்குழுக்களைத் தொடங்கினார். இப்போது அந்த ஊரில் 100-க்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. இதனால் பெரும்பாலான குடும்பங்கள் கந்துவட்டி சிக்கலிலிருந்து மீண்டு வந்து விட்டன. இதனால், கடன் சிக்கல்களில் இருந்து மீண்ட குடும்பங்களில் குழந்தைகளின் படிப்புக்கான தடைகளும் குறைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

No comments: